ஏர் இந்தியா தொடர்பான முடிவு இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய உத்வேகத்தை அளிக்கும் – பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

ஏர் இந்தியா தொடர்பான முடிவு இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்த பின்னர் கூறினார்.

பின்னர் அங்கு திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர்:- உலகெங்கிலும் உள்ள புத்த சமுதாயத்தினரின் நம்பிக்கை கேந்திரமாக இந்தியா திகழ்கிறது என்றார். இன்று தொடங்கி வைக்கப்பட்ட குஷிநகர் சர்வதேச விமான நிலையம், அவர்களது பக்திக்குச் செலுத்தப்படும் காணிக்கை என்று தெரிவித்தார். புத்தபிரான் ஞானம் பெற்றது முதல் மகாபரிநிர்வாணம் அடைந்தது வரையிலான ஒட்டு மொத்த வாழ்க்கைப் பயணத்திற்கும் இந்த சுற்றுவட்டாரப் பகுதி, சான்றாக திகழ்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். முக்கியமான இந்தப் பகுதி இன்று உலகுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


புத்தபிரான் தொடர்புடைய பகுதிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், இப்பகுதிகளை மேம்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். குஷிநகரில் முதலாவதாக வந்திறங்கிய இலங்கை விமானம் மற்றும் அதில் வந்தப் பயணிகளைப் பிரதமர் வரவேற்றார். மகரிஷி வால்மீகியின் பிறந்த தினமான இன்று அவருக்கு மரியாதைச் செலுத்துவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அனைவரின் முயற்சி மற்றும் அனைவரின் ஆதரவுடன் அனைவரும் முன்னேறுவோம் என்ற பாதையில் நாடு பீடுநடை போடுவதாகத் தெரிவித்தார். “குஷிநகரை மேம்படுத்துவது உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய அரசுகளின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.


நம்பிக்கை அல்லது பொழுதுபோக்கு என சுற்றுலாவை அதன் அனைத்து வகைகளிலும் மேம்படுத்த, ரயில், சாலை, விமானம், நீர்வழிப் போக்குவரத்துகள், ஓட்டல், மருத்துவமனை, இணையதள இணைப்பு, சுகாதாரம், கழிவு சுத்திகரிப்பு மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை உறுதி செய்ய புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நவீன கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேற்கொள்வது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார். “இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதோடு இந்தப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வது முக்கியம். தற்போதைய 21 ஆம் நூற்றாண்டு இந்தியா, இத்தகைய அணுகுமுறையுடன்தான் சென்று கொண்டிருக்கிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.


உடான் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் 900-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, 350 வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்த 50-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்களும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பிரதமர் அறிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது பற்றி சுட்டிக் காட்டிய பிரதமர், இம்மாநிலத்தில், விமானப் போக்குவரத்து வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார். உத்தரப்பிரதேசத்தில் குஷிநகர் விமான நிலையத்திற்கு முன்பாகவே 8 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. லக்னோ, வாரணாசி மற்றும் குஷிநகரை தொடர்ந்து ஜேவார் சர்வதேச விமான நிலையப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவைத் தவிர அயோத்தியா, அலிகார், ஆஸம்கர், சித்ரகூட், மொரதாபாத் மற்றும் ஸ்ரவாஸ்தியிலும் விமான நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏர் இந்தியா தொடர்பான சமீபத்திய முடிவு பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த நடவடிக்கை நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறையைத் தொழில் ரீதியாக நடத்தவும், பயணிகளுக்கான வசதி மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும் உதவும் என்றார். “இந்த நடவடிக்கை இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். பாதுகாப்புத் துறையின் விமானத் தளங்களை சிவில் விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த ஏதுவாக இது போன்ற ஒரு பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை பல்வேறு விமான வழித்தடங்களில் பயணத் தூரத்தை குறைக்கும். அண்மையில் வெளியிடப்பட்ட ட்ரோன் கொள்கை, வேளாண்மை முதல் சுகாதாரம் வரையிலும், பேரிடர் மேலாண்மை முதல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் விரைவுச் சக்தி (கதிதக்தி) – தேசிய பெரும் திட்டம், ஆளுகையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, சாலை, ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து வகையானப் போக்குவரத்து வசதிகளையும் உறுதி செய்வதோடு ஒன்றுக்கொன்று உதவிகரமாக அமைந்து ஒன்று மற்றதன் திறனை அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.