‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி.!

Scroll Down To Discover
Spread the love

ரஷ்ய நிறுவனம் ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியை இரண்டு முறை செலுத்த வேண்டும். அதன்பின் ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்தினால் போதுமானது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அவசர காலம்’கோவிஷீல்டு, கோவாக்சின்’ உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மக்களுக்கும் அவை செலுத்தப்பட்டு வருகின்றன.மேலும் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிக்கும், ‘ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, சைடஸ் கேடிலா’ உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளுக்கும் அவசர காலத்தில் பயன்படுத்த டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

இதற்கிடையே ரஷ்யாவின் மற்றொரு தடுப்பூசி யான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை, தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் ஹெட்டேரோ பையோபார்மா லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு டோசாக மட்டுமே செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசிக்கு அவசர காலத்தில் பயன்படுத்த, டி.சி.ஜி.ஐ., இதுவரை அனுமதி வழங்கவில்லை.

ஹெட்டேரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்,ஆறு மாத காலத்திற்குள் உபயோகிக்கப்பட வேண்டும் என்பதால், அதை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கோரி, மத்திய அரசிடம் இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷேவ் கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று ஹெட்டெரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 40 லட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கி உள்ளது.