ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறை தண்டனை.!

Scroll Down To Discover
Spread the love

கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. 2012ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முறைகேடாக நிதியுதவி வந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாரீஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சர்கோஸி மறுத்தார். தேர்தல் பிரசார குழுவினரின் நடவடிக்கைகளிலோ, பணம் செலவு செய்யும் விவகாரத்தில் தலையிடவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், இதனை ஏற்காத நீதிமன்றம், பிரசாரத்தின் போது அதிக பணம் செலவு செய்யப்பட்டது சர்கோஸிக்கு தெரிந்திருந்தது. ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை எனக்கூறியது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சர்கோஸிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இருப்பினும் அவர் சிறை செல்வதற்கான வாய்ப்பு இல்லை எனவும், இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனை நிறுத்திவைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், நீதிமன்ற அனுமதியுடன் வீட்டுக்காவலில் அவர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

சர்கோஸிக்கு, சிறை தண்டனை விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். மற்றொரு ஊழல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் சர்கோஸிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், இரண்டு ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.