எந்தவித அச்சுறுத்தலை எதிர் கொள்ளவும் முப்படைகளும் தயாராக உள்ளனர் – ராஜ்நாத் சிங்

Scroll Down To Discover
Spread the love

மறைந்த பல்ராம்ஜி தாஸ் டேன்டன் தொடர் கருத்தரங்கங்களின் ஒரு பகுதியாக ‘தேசிய பாதுகாப்பு’ குறித்து காணொலி வாயிலாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆகஸ்ட் 30, 2021) உரையாற்றினார்.

தேசிய பாதுகாப்பில் உணர்வுப்பூர்வமாக செயல்படுவதற்கே ஒவ்வொரு அரசும் முன்னுரிமை அளிப்பதாக வலியுறுத்தி, எதிர்வரும் ஆபத்துகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள தயாராகவும் விழிப்புடனும் இருப்பதற்கான திடமான நம்பிக்கையே தேசிய பாதுகாப்பு என்று அவர் கூறினார்.

“சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவிற்குள் நிலையில்லா சூழலை உருவாக்க இந்தியாவிற்கு எதிரான சக்திகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நேரடியாக நம்முடன் போரிட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தபின், மறைமுகமான போரில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவைக் குறிவைக்க தீவிரவாதிகளுக்கு பயிற்சிகளையும் நிதி உதவிகளையும் அளிக்கத் தொடங்கினார்கள்”, என்று அவர் குறிப்பிட்டார்.

புதிதாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விளைவிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் சமீபத்திய நிலவரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார். “இந்தியர்களின் பாதுகாப்பு அரசிற்கு மிகவும் முக்கியம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு ஆப்கான் நிலையை இந்தியாவிற்கு எதிரான சக்திகள் வாய்ப்பாகப் பயன்படுத்தவும் நாம் விரும்பவில்லை”, என்று அவர் வலியுறுத்தினார்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தேசிய பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தல்கள் பெருகி வருவதாக திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறினார். அது போன்ற சவால்களை எதிர்கொள்வதற்காக தேசிய பாதுகாப்பு முறையை தரம் உயர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.