ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லி அழைத்து வரப்பட்ட 78 பேரில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Scroll Down To Discover
Spread the love

ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லி வந்த 78 பேரில் 16 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். அவர்களுக்குப் பயந்து லட்சக்கணக்கான மக்கள், ஆப்கனை விட்டு வெளியேறி வருகின்றனர். நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அவர்களை வெளியேறக் கூடாது என்று தலிபான்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், ஆப்கனில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆப்கனில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.அடுத்தகட்டமாக காபூலில் சிக்கியிருந்த 25 இந்தியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் என 78 பேரை மீட்டு, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானத்தில் கடந்த திங்கட்கிழமை தஜிகிஸ்தானின் துஷான்பே நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள விமான நிலையத்தில் அனைவரும் காத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த 78 பேரும் துஷான்பே விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் நேற்று டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுடன் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பின் 3 பிரதிகளும் எடுத்து வரப்பட்டன.

இந்நிலையில், 78 பேரில் 16 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விமானத்தில் வந்த மற்றவர்களும் 14 நாட்கள் தங்களை கண்காணிப்பில் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவுக்கு 228 இந்தியர்கள் உட்பட 626 பேரை காபூலில் இருந்து மீட்டு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.