பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி & மோகன்லாலுக்கு  10 ஆண்டுக்கான கோல்டன் விசா..!

Scroll Down To Discover
Spread the love

அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற தலைப்பில் 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதம் துபாயில் வசித்து வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் அவரது கணவருமான பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோகைப் மாலிக் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டது.

துபாயில் வசித்து வரும் அவர்களுக்கு மத்திய அடையாளம் மற்றும் குடியுரிமை ஆணையம் 10 ஆண்டுக்கான நீண்ட கால கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இந்திய பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர்களில் முதல் முறையாக பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா நேற்று வழங்கப்பட்டது.

இதற்காக அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த துறையின் தலைவர் முகம்மது அலி அல் சோரபா அல் ஹம்மாதி இருவருக்கும் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அபுதாபி பொருளாதார வளர்ச்சித்துறையின் செயலாளர் ராஷத் அப்துல்கரீம் அல் பலூசி, அபுதாபி குடியிருப்பு அலுவலகத்தின் ஆலோசகர் ஹரப் முபாரக் அல் முஹைரி, லூலூ குழுமத்தின் தலைவர் எம்.ஏ யூசுப் அலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.கோல்டன் விசாவை பெற்றுக்கொண்ட நடிகர்கள் இருவரும் அமீரக அரசுக்கும், தலைமைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினர்.