புதிய வகையில் மோசடி – வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

இணையத் திருடர்கள் புதிய வகையில் மோசடி செய்வதால், வங்கி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு அமைப்பான ‘செர்ட்இன்’ எச்சரித்துள்ளது.

இணைய குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள, ‘செர்ட்இன்’ அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: ‘பிஷ்ஷிங்’ எனப்படும் இணைய மோசடியில் ஈடுபடுவோர், தற்போது புதிய முறையை கையாண்டு வருகின்றனர். வங்கி வாடிக்கையாளர்களுக்கு, மொபைல்போனில், எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுஞ்செய்தியை அனுப்புகின்றனர்.

அதில், வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகள் இடம்பெறும். இதை தவிர்க்க, அந்த எஸ்.எம்.எஸ்.,சில் உள்ள இணைய இணைப்பின் மூலம் சரிபார்க்க சொல்வர். வாடிக்கையாளர் அந்த இணைய இணைப்பில் நுழைந்தால், அவர்களுடைய வங்கியின் இணையதளம் போன்றே இருக்கும் போலி இணையதளத்துக்குள் நுழைவர்.

அதன்பின், அவர்கள் பதிவு செய்யும், ‘இன்டர்நெட் பேங்கிங்’ தகவல்கள் உள்ளிட்டவை, மோசடிகாரர்களுக்கு கிடைத்து விடும். அதனடிப்படையில் உண்மையான வங்கிக் கணக்குக்குள் நுழைந்து பணத்தை திருடுவர்.குறுஞ்செய்தியில் வரும் இணைய இணைப்பின் இறுதியில், ‘என்கிராக்’ என்ற வாசகம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதோடு குறுஞ்செய்தியில் வரும் எந்த இணைய இணைப்பையும் பயன்படுத்தாமல் இருப்பதே பாதுகாப்பானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.