அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பக்தர்கள் பார்க்க அனுமதி – அறக்கட்டளை தகவல்

Scroll Down To Discover
Spread the love

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, அடித்தளம் அமைக்கும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிலை கட்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ராமர் கோவில் கட்டுமான பணிகளை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்காத நிலை இருந்து வந்தது.

இந்தநிலையில், அயோத்தியில் தற்காலிகமாக செயல்படும் ராமர் கோவிலை தரிசிக்க வரும் பக்தர்கள், புதிய ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை பார்க்க அனுமதிப்பது என ராமர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

இதற்காக, தற்காலிக கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு சுவர் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், துவாரங்களுடன் கூடிய 15 அடி அகல இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. அந்த வேலிக்கு பின்னால் இருந்தபடி, கட்டுமான பணிகளை பக்தர்கள் பார்க்கலாம்.

ஆனால், அந்த இடத்தில் நிற்பதற்கு அனுமதி இல்லை. பார்த்தபடியே நகர்ந்து செல்ல வேண்டும் என்று அறக்கட்டளை நிர்வாகி சம்பத்ராய் தெரிவித்தார். 2023-ம் ஆண்டு இறுதிக்குள், ராமர் கோவில் கருவறை, பக்தர்கள் தரிசிக்க தயாராகி விடும் என்றும் அவர் கூறினார்.