பக்தர்கள் இன்றி நடைபெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை..!

Scroll Down To Discover
Spread the love

ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில் உள்ள ஜெகநாதர் கோவில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக ஜெகநாதர் (பகவான் விஷ்ணு), அவரின் சகோதரர் பாலபத்திரர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது. 

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரையானது உலகப் புகழ்பெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கும் புதிய தேர்கள் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான குண்டிச்சா கோவிலுக்கு செல்வார்கள். 

அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. 10 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்த ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது. 


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்கியது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்களின்றி ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரை நடைபெறுகிறது. 

தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பாரம்பரிய வழக்கப்படி, தேரின் முன்பகுதியில், தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் பூரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து, பகவானை வழிபட்டார்.  அதன்பின்னர் ரத யாத்திரை தொடங்கியது. முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகநாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. மாலையில் ரத யாத்திரை குண்டிச்சா கோவிலை அடைந்தது.

ரத யாத்திரையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 டோஸ் தடுப்பூசி போட்ட மற்றும் கொரோனா பாதிப்பு இல்லாத 500 ஊழியர்கள் மட்டுமே ரதத்தை இழுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரத யாத்திரையை பொதுமக்கள் தொலைக்காட்சிகளில் நேரலையாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாதால் தேர் செல்லும் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ரத யாத்திரையை முன்னிட்டு நேற்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி இரவு 8 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.