முதல் முறையாக காஷ்மீரில் இருந்து துபாய்க்கு மிஸ்ரி வகை செர்ரி பழங்கள் ஏற்றுமதி.!

Scroll Down To Discover
Spread the love

தோட்டக்கலை பயிர்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் முக்கிய நடவடிக்கையாக, காஷ்மீரின் ஸ்ரீநகரிலிருந்து துபாய்க்கு சுவையான செர்ரி பழங்கள் முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தேசாய் அக்ரி-புட் என்ற தனியார் நிறுவனம், துபாயில் உள்ள இன்னோதெரா என்ற நிறுவனத்துக்கு செர்ரி பழங்களை ஏற்றுமதி செய்ய, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(APEDA) உதவியது.

இந்த ஏற்றுமதிக்கு முன்பாக மாதிரி பார்சல், ஸ்ரீநகரில் இருந்து துபாய்க்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பப்பட்டது. மும்பையிலிருந்து விமானம் மூலம் இந்த பார்சல் அனுப்பப்பட்டது. இதற்கு துபாய் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதைத் தொடர்ந்து மிஸ்ரி வகை செர்ரி பழங்கள் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மிஸ்ரி வகை செர்ரி பழங்கள் சுவையானது மட்டும் அல்ல. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியத்துக்கான பல பலன்கள் உள்ளன.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட செர்ரி பழ வகைகள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு டபுள், மக்மாலி, மிஸ்ரி மற்றும் இத்தாலி வகை செர்ரி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஏற்றுமதிக்கு முன்பாக, இந்த செர்ரி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு, அபெடா அமைப்பில் பதிவு செய்த ஏற்றுமதி நிறுவனத்தால் அட்டை பெட்டியில் அடைக்கப்பட்டன. இதற்கான தொழில்நுட்பங்களை ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கியது.