மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்..! யாருக்கெல்லாம் வாய்ப்பு?

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இரண்டாவது முறையாக கடந்த 2019ம் ஆண்டு பதவி ஏற்றது. அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த மாதம் பா.ஜ., மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து எந்த நேரத்திலும் மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதனை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தவிர மத்திய பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க உதவிய ஜோதிராதித்தியா சிந்தியா, அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மத்திய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் உயிரிழந்த பின்னர் அவருக்குப் பதில் வேறு அமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை. இப்போது அவரது மகன் சிராங் பாஸ்வானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. பீகார் பாஜக தலைவர் சுஷில் மோடி, மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் நாராயண் ரானே, புபேந்தர் யாதவ் ஆகியோருக்கும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

உபியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வசதியாக அந்த மாநிலத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். அதன்படி வருண்காந்தி, ராம்சங்கர் கதேரியா, ரீட்டா பகுகுணா ஜோஷி, ஜாபார் இஸ்லாம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் பட் அல்லது அணில் பாலுனி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புக்கிடைக்கும் என்று தெரிகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து பிரதாப் சின்காவுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று தெரிகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகள் பெற உழைத்த பாஜக தலைவர்களான ஜெகநாத் சர்கார், சாந்தனு தாக்கூர், நிதீத் பரமானிக் உள்ளிட்ட சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று தெரிகிறது. ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என் று தெரிகிறது. பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது கட்சிக்கு 2 அமைச்சர்கள் வேண்டும் என்று கேட்டிருப்பதாக தெரிகிறது. அதுகுறித்தும் பிரதமர் பரிசீலித்து வருகிறார்.அமைச்சரவையில் இப்போது 53 அமைச்சர்கள் உள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் 81 அமைச்சர்கள் வரை இடம் பெற முடியும். இதன் அடிப்படையில் இன்னும் 28 பேர் வரை அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. தற்போது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்து வருகிறார். எனவே அவர்களில் சிலர் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது.