ஆன்லைன் படிப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க 12 மாம்பழத்தை ரூ1.2 லட்சத்துக்கு வாங்கிய தொழிலதிபர்..!

Scroll Down To Discover
Spread the love

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் துள்சி குமாரி (வயது 11). 6-ம் வகுப்பு மாணவி. இவரது தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதையடுத்து, ‘ஆன்லைன்’ மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.ஆனால் துள்சி குமாரியிடம், செல்போன் வாங்க வசதி இல்லாததால், அவரால், ஆன்லைனில் படிக்க முடியவில்லை. பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுக்க போதிய வருமானம் குமாரிடம் இல்லை.

இது பற்றி தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அமியா ஹீட்டே, ஜாம்ஷெட்பூருக்கு வந்து, துள்சியை தேடி கண்டுபிடித்தார்.துள்சியிடம், ஒரு மாம்பழத்தை ரூ.10 ஆயிரம் வீதம் 12 மாம்பழங்களை வாங்கினார். பின்னர் துள்சி தந்தையின் வங்கி கணக்குக்கு, ரூ.1.2 லட்சத்தை உடனடியாக, ஆன்லைன் வழியாக செலுத்தினார்.

இந்த பணத்தை வைத்து, செல்போன் வாங்கி, ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும் என, துள்சியிடம் அமியா ஹீட்டே கேட்டுக்கொண்டார். மேலும், ஒரு ஆண்டுக்கான இன்டர்நெட் இணைப்பு கட்டணத்தையும், துள்சிக்கு அமியா ஹீட்டே வழங்கினார்.