மோடி தான் ‘நம்பர் ஒன்….! 2024ல் நாங்கள் 350 இடங்களில் வெற்றி பெறுவோம் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

Scroll Down To Discover
Spread the love

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அணியாக பாஜகவை எதிர்கொள்ள இப்போது இருந்தே தயாராகி வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் 3வது அணி அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தேர்தல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர், சரத்பவாரை குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது முறையாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளின் கூட்டம் சரத் பவார் இல்லத்தில் இன்று (ஜூன் 22) நடைபெற்றது.

இது குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது: எத்தனை அணிகள் அமைக்கப்பட்டாலும் அது ஒரு பொருட்டே இல்லை. பிரதமர் மோடியின் தலைமை வலுவாக உள்ளது. இன்றைக்கும் அவர்தான் ‘நம்பர் ஒன்’. சரத் பவார் மீதும் எங்களுக்கு மரியாதை உள்ளது. அவர் மஹாராஷ்டிராவில் பிரபலமான தலைவர். நிறைய நற்பணிகளையும் செய்துள்ளார்.

ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் மட்டுமே உள்ளது. வேறு எந்த மாநிலங்களிலும் அக்கட்சிக்கு பெரிய ஆதரவு இல்லை. இந்த அணியில் மம்தா பானர்ஜி இணைவாரா என்பதும் சந்தேகம்தான். எனவே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

அனைவருக்கும் தேர்தலில் அணியை உருவாக்க உரிமை உள்ளது. ஜனநாயகத்தில் வெற்றி பெற அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதேசமயம், மோடியை வீழ்த்துவதும் எளிதல்ல. சரத் பவார் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது என்று நினைக்கிறேன். பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரை 2019 தேர்தலில் அவர் எங்கள் பக்கம் இல்லை.

அப்போது மோடி அரசு 303 இடங்களில் வென்றது. 2014-ல் பிரசாந்த் கிஷோர் எங்களுடன் இருந்தபோது பாஜக 222 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2024ல் நாங்கள் 350 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.