யோகா தினத்தையொட்டி ஈஷா சார்பில் ஆன்லைன் இசை, யோகா நிகழ்ச்சி

Scroll Down To Discover
Spread the love

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சார்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும் யோகா கற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஆன்லைன் வாயிலாக நாளை (ஜூன் 19) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கும் இந்த நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசை கலைஞர்கள் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், கலைமாமணி காய்த்ரி கிரீஷ், அனுஷா தியாகராஜன் ஆகியோர் குரலிசை நிகழும். அத்துடன், யூ.பி.ராஜூ மற்றும் நாகமணி ராஜூ தம்பதியினரின் மாண்டலின் இசை, நெய்வேலி எஸ்.ராதாகிருஷ்ணா அவர்களின் வயலின் இசை, ராஜாராமன் அவர்களின் கடம் இசை, என்.ராமகிருஷ்ணன் அவர்களின் மிருதங்கம் இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதற்கு இடையில், யோகா தினம் தொடர்பாக சத்குருவின் சிறு உரையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ‘சிம்ம க்ரியா’ என்ற யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ – டியூப் சேனலான Sadhguru Tamil சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். கரோனா பாதிப்பால் மன அழுத்தம், பயம், உடல் நலன் பாதிப்பு போன்றவை அதிகரித்துள்ள இந்த சூழலில் இந்த இசை நிகழ்ச்சியும் யோகாவும் அதில் இருந்து வெளி வர உறுதுணையாக இருக்கும்.