பீகாரில் 27 வயதில் டி.எஸ்.பி ஆன முதல் இஸ்லாமிய பெண்.!

Scroll Down To Discover
Spread the love

பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவாவைச் சேர்ந்தவர் ரசியா சுல்தான். இவரின் தந்தை முகமது அஸ்லம் அன்சாரி போகாரோ எஃகு ஆலையில் ஸ்டெனோகிராஃபராக பணி செய்துவந்ததால், ஜார்கண்டில் உள்ள போகாரோவில் பள்ளிப் படிப்பை முடித்தார் ரசியா.

இதற்கிடையே, 2016ல் அவரின் தந்தை காலமாக, அவரின் தாய் மட்டும் போகாரோவில் தங்கிவிட, பள்ளிப்படிப்பை முடித்ததும், ஜோத்பூருக்குச் சென்ற ரசியா, அங்கு பிடெக் முடித்தார். இதன்பின் மீண்டும் பீகார் திரும்பிய அவர் பீகாரின் அரசுப் பணியில் இணைந்தார். பீகார் அரசின் மின்சாரத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தனது சிறுவயது கனவாக இருந்த பீகாரின் பொதுச் சேவை ஆணையத் தேர்வுகளான பிபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார்.

தற்போது அதை வெற்றிகரமாக முடித்து பீகார் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன்மூலம் பீகார் காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி) பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட 40 நபர்களில் ரசியா சுல்தான் வெற்றி பெற்று தனது 27 வயதில் இளம் டி.எஸ்.பியாக பணியில் சேர உள்ளார்.

இது தொடர்பாக ரசியா சுல்தான் அளித்த பேட்டி ஒன்றில், “காவல்துறை அதிகாரியாக பணியாற்றப்போவதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்துவருகிறது. பெண்கள் தங்களுக்கு எதிரான எந்தவொரு குற்றச் சம்பவத்தையும் போலீசில் புகார் செய்ய முன்வருவதில்லை. இதனைக் களைய நான் முயற்சி செய்வேன்” என்றவர், இஸ்லாமியச் சமூக குழந்தைகளின் கல்வி குறித்தும் பேசியிருக்கிறார்.

இதற்கிடையே சில தினங்கள் முன்னர்த்தான் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார் ரசியா. தடுப்பூசி தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான புரிதல்களை அகற்றவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்காகத் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.