இந்திய அரசின் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்.!

Scroll Down To Discover
Spread the love

மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த விதிகளை ஏற்க மத்திய அரசு வழங்கிய 3 மாத காலக்கெடு முடிந்துள்ளது. இதற்கிடையே, மத்திய அரசின் புதிய விதிகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாக டிவிட்டர் நிறுவனம் நேற்று முன்தினம் கடுமையாக சாடியது.

இதற்கு மத்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், உடனடியாக புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. விதிகளின்படி புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கின்றன.

ஆனால், ட்விட்டர் மட்டும் இதுவரை விதிகளுக்கு கட்டுப்பட ஒப்புதல் தெரிவிக்கவில்லை. புதிய விதிகளின்படி குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது