இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்துக்கு சுகாதார சான்று பெற வேண்டும் : உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்து 606 கோவில்கள் உள்ளன. மேலும் 56 திருமடங்கள் மற்றும் திருமடங்களுடன் இணைந்த 58 கோவில்களும் உள்ளன. இதில் 754 கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதான கோவில்களில் ‘ஸ்டால்கள்’ அமைக்கப்பட்டு லட்டு, அப்பம், முறுக்கு, அதிரசம், புளியோதரை, வடை, தட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை பிரசாதங்களாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்துக்கு சுகாதார சான்று பெற வேண்டும் என்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை கடந்த 2017-ம் ஆண்டு அறிவுறுத்தியது. தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்து சமய அறநிலையத்துறையின் வேண்டுகோளை ஏற்று முதற்கட்டமாக 46 கோவில்களின் பிரசாதங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சில கோவில்களின் பிரசாதங்களும் பரிசோதனை செய்யப்பட்டு, சுகாதார சான்று வழங்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடையும்” என்றனர்.

இதனை தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை அறிவுரையை ஏற்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள 46 பெரிய கோவில்களில் முதற்கட்டமாக இந்த நடைமுறையை அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.