கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளைத் தத்தெடுக்க ஏராளமானோர் முன்வருவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரிமாறப்படுகிறது. இதையடுத்து இதுபோன்ற சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெற்றோர் மற்றும் ஆதரவாளர் இல்லாத குழந்தைகள் பற்றிய தகவலை 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கொவிட் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சட்டபூர்வமாக உதவுவதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிமுறைகள் பின்வருமாறு:

பொதுமக்கள் கவனத்திற்கு:
கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவிப்பதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல், அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரானது என்பதால், இவற்றில் ஈடுபடுவதையோ அல்லது ஊக்குவிப்பதையோ தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கு சட்டபூர்வமாக உதவும் வழிகள் பின்வருமாறு:

1. சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம் 2015 இன் (இனி சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 2 (14)இன் கீழ் பெற்றோர் அல்லது ஆதரவாளர் இல்லாத குழந்தைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவையான குழந்தைகள் என்று அழைக்கப்படுவார்கள். இந்தச் சட்டம் மற்றும் விதிகள், நிறுவனம் மற்றும் நிறுவனம் சாராத அமைப்புகள் இத்தகைய குழந்தைகளுக்கு பாதுகாப்பான சேவையை அளிப்பதை கட்டாயமாக்குகிறது .

இதுபோன்ற குழந்தைகளின் மறு வாழ்விற்காக நிலையான செயல்பாட்டு வழிமுறைகளையும் அது வகுத்துள்ளது.

2. எனவே கொவிட் பெருந்தொற்றினால் தனது பெற்றோரை இழந்து வேறு ஒருவரது ஆதரவும் இன்றி இருக்கும் குழந்தை, 24 மணி நேரத்திற்குள் (பயண நேரம் தவிர்த்து) மாவட்ட குழந்தை நல ஆணையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

3. தற்போதைய சூழலில் கொவிட் சம்பந்தமான கட்டுப்பாடுகளால், நேரடியான தொடர்பு ஏற்படுத்த முடியாதபட்சத்தில் டிஜிட்டல் தளம் வாயிலாக உரையாடுமாறு மாநில அரசுகளுக்கு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

4.தனது இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தை பற்றிய தகவலை குழந்தை உதவி எண்ணிற்கு (1098) தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள குழந்தை உதவிப் பிரிவு, 24 மணி நேரத்திற்குள் குழந்தையை ஆணையத்திடம் ஒப்படைக்கும். தேவை ஏற்படும்போது குழந்தையின் நலனைக் கண்காணிப்பதில் ஆணையத்திற்கு உள்ளூர் குழந்தை உதவி பிரிவு ஆதரவளிக்கும்.

5.குழந்தையின் உடனடி தேவையை ஆணையம் ஆராய்ந்து, ஆதரவளிப்பவரிடமோ, அல்லது நிறுவனம் அல்லது நிறுவனம் சாராத அமைப்புகளிடமோ ஒப்படைப்பதை ஆணையம் உறுதி செய்யும். இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு குழந்தையின் பாதுகாப்பையும் விருப்பத்தையும் உறுதி செய்து, இயன்றவரை குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் சமூக சூழலின் பராமரிப்பில் அவன்/அவளை ஒப்படைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

6. உறவினர்களின் பராமரிப்பில் குழந்தை வளர நேர்ந்தால், குழந்தையின் நலனை ஆணையம் அடிக்கடி கண்காணிக்கும்.

7. இந்தச் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ், குழந்தைக்கு தேவையற்ற துயரம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவன்/அவளது அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

8. இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுகையில் சம்பந்தப்பட்ட ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட கொவிட் நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.‌

9.ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தை (cara.nic.in) அணுகலாம்.