தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பெற பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம்.!

Scroll Down To Discover
Spread the love

தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு மருந்துகளைப் பெறுவோர் சிலர், அவற்றைத் தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் எழுந்துள்ளன.

இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், வரும் 18 ஆம் தேதி(இன்று) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று வெளியிடப்பட்டுள்ளர்து. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் http://tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில், தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து பெற பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்த பின்னர், தனியார் மருத்துவமனைகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி மருந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.