தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்கள், செய்திகள் ஒளிபரப்பப்படும் போது வெளியிடக்கூடிய விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட்டது – தமிழக அரசு

Scroll Down To Discover
Spread the love

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்காமல் வெளிப்படையாக உள்ளது எனவும், இது உயிர்காக்கும் விஷயம் என்பதால் கொரோனா குறித்த செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நாளிதழ், தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றதும், ஊடக பணியாளர்களும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அதன் பரவல் சங்கிலியை உடைக்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. உலகளாவிய டெண்டர் மூலம் 3.5 கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்க இருக்கிறது. மேற்குவங்கத்தில் இருந்து ரயில் மூலம் 80 டன் திரவ ஆக்சிஜன் சென்னைக்கு வந்தது. நெதர்லாந்தில் இருந்து திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரத்தில் 7,800 படுக்கைகள் உருவாக்கியுள்ளோம்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 122 தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 14 சித்த சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்திட அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறாக தமிழக அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், சரியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

தமிழக அரசின் நடவடிக்கைகளை ஊடகங்களில் முழுமையாக வெளியிட வேண்டும். இது அரசியல் விவகாரம் அல்ல. உயிர்காக்கும் விஷயம் என்பதால் கொரோனா குறித்த செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்காமல் வெளிப்படையாக உள்ளது. தவறான செய்தியை ஊடகங்கள் வெளியிட்டுவிடக் கூடாது. அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள், மக்களுக்கு வழிகாட்டுங்கள், மக்கள் உயிரை காக்க உறுதுணையாக இருங்கள். அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். சந்தேகம் இருந்தால், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விளக்கம்பெற்று அதையும் சேர்த்து வெளியிட வேண்டும்.

பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தமிழக செய்தித்துறை வெளியிட்டுள்ளது. அதனையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். தொலைக்காட்சி தொடர்களில் முகக்கவசம் அணிவது போல காட்சிப்படுத்தினால், மக்களிடம் ஆழமாக பதியும். மக்களின் நல்வாழ்வில் தான் நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. கொரோனா குறித்த செய்திகள் மக்களிடம் பயத்தை ஏற்படுத்தாமல், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அனைவரும் ஒன்றுப்பட்டு ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டால் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வரலாம். நோய் தொற்றை அறவே குறைக்கும் முயற்சியில் அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஊடகத்துறைக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.