கொரோனா பரவுவதால் : கிராமப்புறங்களில் வீடு, வீடாக சோதனை நடத்த வேண்டும் -பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை காணொலி காட்சி வழியாக கூட்டினார். இதில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அப்போது கொரோனா தொற்று பரவலின் தற்போதைய நிலையையும், கட்டுக்குள் கொண்டு வருவதற்காக எடுக்கப்படுகிற தொடர் நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள். அவ்வாறு அதிகாரிகள் கூறிய தகவல்கள் பின்வருமாறு:-

* மார்ச் மாதம் வாரம் 50 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தற்போது பரிசோதனை அளவு வாரத்துக்கு 1.3 கோடி என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா பாதிப்பு விகிதம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மீட்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
* 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் விவரம், மாநில வாரியாக விளக்கப்பட்டது. எதிர்காலத்தில் தடுப்பூசி கையிருப்பு, செல்லும் பாதை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடி அதிகாரிகள் கூறிய தகவல்களை கவனத்தில் கொண்டதுடன் அவர் சில ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.கொரோனா மாதிரிகள் பரிசோதனையில் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களில், உள்ளூர் அளவில் கட்டுப்பாடு உத்திகள் பின்பற்றப்படவேண்டியது இந்த நேரத்தின் தேவை என்று பிரதமர் மோடி, அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூறினார்.

அதிக பாதிப்பு விகிதம் உள்ள பகுதிகளில், ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் துரித பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அழுத்தத்துக்கு ஆளாகாமல் வெளிப்படையாக உண்மையான நிலவரத்தை மாநிலங்கள் தெரிவிக்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோடிட்டுக்காட்டினார்.கிராமப்புறங்களில் கொரோனா பரவிவரும் வேளையில், வீடு வீடாக சென்று சோதனை நடத்த வேண்டும், கண்காணிப்பில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம் என்று அவர் அறிவுறுத்தினார். ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் தேவையான சுகாதார வளங்களை அளித்து, அவர்களின் பணிகளை மேம்படுத்துவது பற்றியும் விவாதித்தார்.

அத்துடன் கிராமப்புறங்களில் வீடுகளில் தனிமைப்படுத்தி, சிகிச்சை பெறுவது தொடர்பாக விளக்கப்படங்களுடன் எளிதான மொழியில் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்கள் சில மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை பிரதமர் மோடி தீவிரமாக கவனத்தில் கொண்டார். மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களை நிறுவுதல், செயல்படுத்துதல் குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.