கொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்”- பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

Scroll Down To Discover
Spread the love

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- “கோவிட் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன.

இதனைக் கருத்தில்கொண்டு, ஜிஎஸ்டி கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் என நிர்ணயிக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும்.

1. நிலுவையிலுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

2. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல்வரி விதிப்பால் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும்.

3. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவிகிதம் என்ற அளவிலிருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டும்”.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.