ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை…!

Scroll Down To Discover
Spread the love

பொது ஊரடங்கின் போது அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக அவற்றை பதுக்குபவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற, சிறிதும் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நுகர்வோர் விவகாரங்கள் துறை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் முதன்மை செயலாளர்களுடன் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திருமிகு நிதி காரே, நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் மற்றும் அவற்றின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மருந்துகள், சுகாதார பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல், நியாயமான விலையில் அவற்றை கிடைக்க செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தேவை மற்றும் விநியோகம் இடையே எழும் பிரச்சினைகளைத் தடுப்பதற்காக உணவு மற்றும் பொது விநியோகம், சட்ட அளவியல், உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் காவல் ஆகிய துறைகள் அடங்கிய இணை குழுக்கள், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படலாம்.

தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் மக்கள் வாங்குவதைத் தடுப்பதற்கு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.