கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான மையங்கள் மற்றும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

Scroll Down To Discover
Spread the love

மஹாராஷ்டிராவை போலவே தமிழகம், பஞ்சாப், மத்திய பிரதேசம், டில்லி, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி பணி நிலவரங்கள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி:- “நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்களிடையே கொரோனா பரவல் தொடர்பான அச்சம் பரவாமல் தடுப்பது அரசின் கடமை. கொரோனா வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.தடுப்பு மருந்துகள் வீணாவதை நாம் தடுக்க வேண்டும்.


இதற்காக சரியாக திட்டமிடுவதுடன், அதில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். எந்த விலை கொடுத்தாவது தடுப்பு மருந்துகள் வீணாவதை தடுக்க வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டாலும் கவனமாக இருத்தல் அவசியம், மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். கொரோனாவை தடுப்பதற்கான வழிகளை மாநில அரசுகள் தெரிவிக்கலாம். கொரோனாவுக்கு எதிரான போரில், மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கொரோனா மீண்டும் பரவுவதை தடுக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து கொரோனாவை தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது.

நாடுமுழுவதும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கொரோனா பெருமளவு கட்டுக்குள் வந்தது. மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகுவதை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், முதல்வர் பழனிசாமிக்கு பதில் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் கலந்து கொண்டார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் பூபெஷ் பாகெல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அசாமில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றதால், அவருக்கு பதில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.