2025-க்குள் சாலை விபத்துகளை 50% குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி

Scroll Down To Discover
Spread the love

2025-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதம் வரை குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

நிலைமை மிகவும் கவலை அளிப்பதாகக் கூறிய அவர், விபத்துகளில் உலகத்திலேயே முதல் இடத்தில் இந்தியா இருக்கிறதென்றும், சாலை விபத்துகளில் அமெரிக்கா மற்றும் சீனாவையே நமது நாடு மிஞ்சி விட்டதென்றும் கூறினார்.

சர்வதேச சாலை கூட்டமைப்பின் இந்திய கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கு வரிசையை தொடங்கி வைத்த அவர் மேற்கண்டவாறு கூறினார். “இந்தியாவில் சாலை பாதுகாப்பு சவால்கள் மற்றும் செயல்திட்டத்தை வகுத்தல்” என்பது இதன் மையக்கருவாகும்.


இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர், 4.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 415 பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர்.விபத்துகளால் ஏற்படும் சமூக-பொருளாதார இழப்புகள் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 3.14 சதவீதம் நஷ்டம் ஏற்படுகிறது. உயிரிழப்போரில் 70 சதவீதம் பேர் 18 முதல் 45 வயது பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருவதாக்வும், 5,000 ஆபத்து மிக்க பகுதிகள் கண்டறியப்பட்டு செப்பனிடப்பட்டு வருவதாகவும் திரு கட்கரி கூறினார்.