வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கலாம்: சச்சின் தெண்டுல்கர் எதிர்ப்பு

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திக்ரி மற்றும் சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டம் 71வது நாளாக இன்றும் தொடருகிறது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். இந்த சம்பவத்தில், போலீசாரின் அனுமதியை மீறி அவர்கள் வேறு தடத்திலும், வேறு நேரத்திலும் டிராக்டர்களை கொண்டு முட்டி, மோதி தடுப்புகளை உடைத்து முன்னேறி செங்கோட்டையை அடைந்தனர்.அதன்பின் மத கொடி ஒன்றை செங்கோட்டையில் ஏற்றினர். இந்த சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற 80க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்து வரும், விவசாயிகள் போராட்டம் குறித்து, பிரபல பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு சச்சின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்து கொள்ள முடியாது. உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம்; பங்கேற்க முடியாது. இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும். இந்தியர்களே முடிவு எடுப்பார்கள். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி உள்ளது