முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா : 21க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களின் குலதெய்வமான முனியாண்டி சுவாமி கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று திருவிழா நடக்கும். 85வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒரு வாரம் காப்புகட்டி விரதம் மேற்கொள்வர். விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய்,பழம்,பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீ முனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் 21 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு அசைவ பிரியாணி தயார் செய்யப்பட்டது. பின்னர் அந்த பிரியாணி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.