சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை.? எந்தெந்த கோவில்களில் சாமி சிலைகள் மாயமாகியுள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு

Scroll Down To Discover
Spread the love

சென்னை ஐகோர்ட்டில், வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வரலாறு, சிலைகளின் தொன்மை, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.

ஆனால், பல கோவில்களில் இந்த பதிவேடுகள் காணாமல் போனதால், ஐகோர்ட்டு உத்தரவுப்படி, கோவில் சொத்துகள் குறித்த விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதில், பல கோவில்களின் சொத்துகள், சிலைகள் மாயமானது தெரியவந்துள்ளது.

ஆனால், அதை அதிகாரிகள் மறைக்கின்றனர். எனவே, கோவில்களுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், சிலைகள் மாயமானது உள்ளிட்டவை குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ், தொல்லியல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு வக்கீல் வெங்கடேஷ் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர். எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன? இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க என்ன வழி? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.