அச்சன்புதூர் தமுமுக சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு..!

Scroll Down To Discover
Spread the love

அச்சன்புதூர் பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமுமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மனுவின் விபரம்:
1). அச்சன்புதூர் பேரூராட்சியில் 15000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கென்று பேருந்து நிலையம் இல்லை, பல பகுதிகளிலிருந்து அச்சன்புதூர் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. மழை நேரங்களில் பேருந்து நிலையம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். (பேருந்து நிலையம் அமைக்க பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள மந்தை வெளி திடல் காண்பிக்கப்பட்டது) மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்றும்..

2). அச்சன்புதூரில் உள்ள அஞ்சல் நிலையம் கிளை அஞ்சலகமாக உள்ளது. இதற்கு முன் கிளை அஞ்சலகமாக இருந்த போது தனியாக அஞ்சல் எண் (627801) இருந்தது. அதனை மாற்றி தற்போது இலத்தூர் துணை அஞ்சலகத்தின் அஞ்சல் எண் (627803) பயன்படுத்தப்படுகிறது. தனியாக அஞ்சல் எண் அச்சன்புதூருக்கு அளிக்க வேண்டும், மேலும் அச்சன்புதூர் கிளை அஞ்சலகத்தில் சில சேவைகள் இல்லை இதனால் இலத்தூர் மற்றும் வடகரை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து சிரமப்படுகின்றனர். காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அச்சன்புதூர் அஞ்சலகம் இயங்குகிறது. ஆகவே அச்சன்புதூர் கிளை அஞ்சலகத்தை கணிணிமயமாக்கப்பட்டு அனைத்து சேவைகளும் கிடைக்கும்படியும், காலை முதல் மாலை 4 மணி வரை அஞ்சலகம் இயங்கும்படி துணை அஞ்சலகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும்..

3). அச்சன்புதூர் 5 வது மணக்காட்டுப்பகுதியில் குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. தண்ணீர் பிடிக்க பல பகுதிகளுக்கு செல்கிறார்கள், இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். அந்தப்பகுதி நிலப் பரப்பளவு அதிகம், மேலும் மக்கள் தொகையும் அதிகம் ஆதலால் அந்தப்பகுதிக்கென்று தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (வாட்டர் டேங்க்) அமைத்து தர வேண்டும். மக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் எனவும்..

4). அச்சன்புதூருக்கு சின்னக்காட்டுப்பகுதியிலிருந்து குடிதண்ணீர் கொண்டுவர திட்டங்கள் அமைத்து செயல்படுத்தப்பட்டது. தற்போது தண்ணீர் குழாய் பழுதடைந்து உள்ளதாக தகவல் உள்ளது. அதனை சரி செய்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

5). அச்சன்புதூர் பேரூராட்சி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் எனவும்

6). அச்சன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி செவிலியர்கள், மற்றும் மருத்துவர்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும்..

7). அச்சன்புதூர் பேரூராட்சி பகுதியில் சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா அமைத்துதர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூறினார்.

இதில் மாவட்டதுணை செயலாளர் அகமது அலி ரஜாய், கிளை தலைவர் முகம்மது கனி, செயலாளர் ஜவ்ஹர் அலி, துணை செயலாளர் அப்துல் ரஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.