மத்திய அரசின் மூன்று சீர்திருத்தங்களை நிறைவேற்றிய மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.1004 கோடி கூடுதல் நிதி.!

Scroll Down To Discover
Spread the love

மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நிர்ணயித்த நான்கு சீர்திருத்தங்களில், ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய மூன்று மக்கள் மைய சீர்திருத்தங்களை மத்தியப் பிரதேசமும், ஆந்திரப் பிரதேசமும் நிறைவேற்றியுள்ளன.

இதற்காக இந்த இரு மாநிலங்களுக்கும், புதிதாக தொடங்கப்பட்ட ‘மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி’ திட்டத்தின் கீழ் ரூ.1004 கோடி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத்துறை முடிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.344 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.660 கோடியும் கிடைக்கும்.இந்த சிறப்பு நிதியுதவித் திட்டத்தை, தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் கடந்தாண்டு அக்டோபர் 12ம் தேதி அறிவித்தார்.

சீர்திருத்தங்களை நிறைவேற்றியதற்காக, இந்த இரு மாநிலங்களும் ரூ.14,694 கோடி கூடுதல் கடன் பெற, மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மூலதன செலவுகளுக்காக இந்த நிதியுதவி கூடுதலாக வழங்கப்படுகிறது.கோவிட் 19 தொற்று காரணமாக, வரி வருவாய் இழப்பை சந்தித்த மாநிலங்களின் மூலதன செலவை ஊக்குவிப்பதுதான், இந்த சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்துக்கு மாநிலங்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை, 27 மாநிலங்களின் ரூ.9880 கோடி மதிப்பிலான மூலதனச் செலவுத் திட்டங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு முதல் தவணையாக, ரூ.4940 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பலனை தமிழகம் பெறவில்லை.