வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி.!

Scroll Down To Discover
Spread the love

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நாட்டினார்

இந்த நிலையில் ராமஜென்ம பூமி தீரத் கேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், அயோத்தியில் நேற்று கூறியதாவது:- அயோத்தியில் ராமர் கோவில் வடிவமைப்பு மற்றும் அடித்தள அமைப்பை நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் முடிவு செய்யும்.ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் மகர சங்கராந்தியன்று (15-ந்தேதி) தொடங்கும். கட்டுமானப்பணிகள் 3 ஆண்டுகள் நடைபெறும். 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவில் கட்டுமானப்பணிகள் முடிந்து விடும்.

மிர்சாபூரில் இருந்து கொண்டுவரப்படும் பிரத்யேக கற்கள், ராமர்கோவில் அஸ்திவாரத்துக்கு பயன்படுத்தப்படும். 5 ஏக்கர் நிலப்பரப்பில் பிரதான கோவில் கட்டப்படும். கோவில், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 அடுக்குகளை கொண்டிருக்கும். 400 ஆண்டுகள் நிலைத்து நிற்கத்தக்க அளவில் சிறப்பு சிமெண்ட் பயன்படுத்தப்படும்.கோவிலுக்குள் நுழைவதற்கு 22 படிக்கட்டுகள் ஏறிச்செல்ல வேண்டியதிருக்கும். முதியோருக்காகவும், நோயாளிகளுக்காகவும் எஸ்கலேட்டர் என்னும் மின் ஏணி வசதி செய்யப்படும். லிப்ட் என்னும் மின் தூக்கி வசதியும் ஏற்படுத்தப்படும். எஞ்சிய 65 ஏக்கர் நிலத்தில் மற்ற கட்டுமான பணிகளும் ஒரே நேரத்தில் செய்யப்படும்.

ராமர் கோவில் கட்டுமான பணிக்காக நன்கொடை வசூல் 15-ந்தேதி தொடங்கும். அது மகாபூர்ணிமாவரை (பிப்ரவரி 27) தொடரும். நன்கொடை வசூலிக்க 4 லட்சம் பக்தர்கள், 11 கோடி வீடுகளுக்கு செல்வார்கள்.ரூ.10, 100, 1,000 என்ற வகையில் கூப்பன்கள் இருக்கும். 1,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை தருவோருக்கு ரசீது வழங்கப்படும்.