அசாம் மாநில அரசு திங்களன்று சட்டப்பேரவையில் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தது. இதன்படி அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் ஒழிக்கப்படும், அவை பொதுக்கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும் என்று மாநில அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்..
இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இந்த மசோதாவை ஆய்வு செய்ய தேர்வு குழுவுக்கு அனுப்பிவைக்கவேண்டும்’ என அவர்கள் வலியுறுத்தினர். எனினும் மாநில கல்வித் துறை அமைச்சர் பிஸ்வ சர்மா அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் அந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதா நிறைவேறியுள்ளதால் மாநிலத்திலுள்ள அனைத்து மதரசாக்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் சராசரி பள்ளிகளாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

														
														
														
Leave your comments here...