இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம் – பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி, 72வது முறையாக இந்த ஆண்டிற்கான கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

அவர் பேசியதாவது : நமது நாடு 2021ம் ஆண்டில், வெற்றிகளின் புதிய சிகரங்களை தொட வேண்டும். உலகத்தில் இந்தியாவிற்கு என ஒரு அடையாளம் ஏற்படுத்த வேண்டும். நாடு வலிமை பெற்றதாக மாற வேண்டும்.

நமது நாட்டில், சவால்களுக்கும், சங்கடங்களுக்கும் குறையேதும் இல்லை. கொரோனா காரணமாக உலகில் விநியோகச் சங்கிலி நோய் தொடர்பான பல இடையூறுகள் ஏற்பட்டன. ஆனால், நாம் இவையனைத்திலும் இருந்து தற்சார்பு என்ற புதிய கற்றலை பெற்றோம். நாம் தன்னிறைவு இந்தியாவை ஆதரிக்கிறோம். அதனால், நமது தயாரிப்பாளர்களும் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தங்களது தயாரிப்புகளில், தரம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற குரல வீடுகள்தோறும் எதிரொலிக்க துவங்கிவிட்டது. நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். எவை உலக அளவில் சிறந்து உள்ளனவோ அவை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். இதற்கு நமது, உற்பத்தியாளர்களும், தொழில்முனையும் நண்பர்களும் முன் வர வேண்டும். ‘ஸ்டார்ட் அப்’களும் முன்வரவேண்டும். இதுவே உற்பத்தியாளர்கள், தொழில்துறையினருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.

பொது மக்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவோம் என முடிவு செய்வோம். இந்த முறை நமது தேசத்தின் பொருட்டு நாம் கண்டிப்பாக இப்படி ஒரு உறுதியை மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி கூறினார்.