இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை : டெல்லியில் நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் முதன் முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையை டெல்லி மெட்ரோவின் மஜந்தா மார்க்கத்திலும் (மேற்கு ஜனக்புரி – தாவரவியல் பூங்கா), விமான நிலைய மார்க்கத்தில் முழுவதுமாக இயங்கக்கூடிய தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டை சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி 2020 டிசம்பர் 28 அன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாகத் தொடங்கி வைப்பார்.

புதிய வகையான இந்தத் தொழில்நுட்பங்களின் வாயிலாகப் புதியதொரு பயண அனுபவத்தையும், மேம்படுத்தப்பட்ட இணைப்பையும் பெறலாம். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன. மஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு தில்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் முழுவதும் செயல்படுத்தப்படும் தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டையின் மூலம் ரூபே பற்று அட்டை வைத்திருப்பவர்கள் இந்த மார்க்கத்தில் புதிய போக்குவரத்து அட்டையைப் பயன்படுத்திப் பயணம் செய்யலாம். வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் தில்லி மெட்ரோ ரயில்கள் அனைத்திலும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும்.