தொடர் மழை காரணமாக வயலில் அழுகும் சின்ன வெங்காயம் ; விவசாயிகள் வேதனை – நிவாரணம் வழங்க கோரிக்கை

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் பன்னியான், கொக்குளம், செக்கானூரணி, அம்மன் கோவில்பட்டி, கீழப்பட்டி, கண்ணனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் சின்னவெங்காயம் சுமார் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவமழை காரணமாக வெங்காய செடிகளில் வேர்அழுகல்
நோய் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் , காய்பிடிக்கும் பருவத்தில் நோய் தாக்கியுள்ளதால் சின்ன வெங்காய செடிகள் மண்ணோடு மடிந்து வருகிறது.இந்தநிலையில் உழவு, நடவு, உரம், மருந்து என ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள், உரிய விளைச்சலை எடுக்கமுடியாமல் வேதனையில் தவித்து வருகின்றனர்.மேலும், விலை இல்லாததால் வெங்காய விளைநிலங்களில் மாடுகளை மேய்க்க விடும் அவல நிலையும் உள்ளது.

இதுகுறித்து இந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- ஆடி மாதம் முதல் பல்வேறு வகையான மானாவாரி பயிர்களை விவசாயிகள் பயிர் செய்வது வழக்கம். இந்தநிலையில், கடந்த ஆடிமாதம் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் வெங்காயச் செடிகள் அனைத்தும் அழுகிவிட்டது.நடவு முதல் அறுவடை செய்யும் வரை ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.

இந்த நிலையில் தற்பொழுது சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் சில்லரை விலை ரூ. 100 முதல் ரூ.120 வரை விற்று வருகிறது. இந்த நேரத்தில் மழை காரணமாக வெங்காய செடிகள் அழுகி வீணாகி விட்டது. அதனால் ஒரு ஏக்கர் பயிர் செய்துள்ள விவசாயிக்கு தலா ஒரு லட்சம் வரை இழப்பீடு ஏற்படும் அவலம் உள்ளது.

மேலும் அதிக வட்டிக்கு வாங்கிய வெங்காய விவசாயம் செய்து வருவதால் இந்த இழப்பீடுகளை தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் எனவே வேளாண் துறையினர் தங்களது விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வெங்காய பயிர்களுக்கான உரிய இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.