வேளாண் சட்டங்களுக்கு அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு ஆதரவு.!

Scroll Down To Discover
Spread the love

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவினர் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பிகாரைச் சேர்ந்த விவசாயத் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை இடைத்தரகர்களின் தலையீட்டிலிருந்து வேளாண் சட்டங்கள் பாதுகாக்கும் என்பதில் அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர்.‌

வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்களுக்கு வெளியே விவசாயிகள் சுதந்திரமாக தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய இந்த சட்டம் வழிவகை செய்வதை உறுதி செய்யும் என்று அவர்கள் கருதினர். மேலும் விளைபொருட்களை வாங்குவோரிடம் நேரடியாக ஒப்பந்தத்தில் ஈடுபடுவதன் வாயிலாக முன்கூட்டியே நிர்ணயித்த விலையில் பொருட்களை விற்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், தரமான விதைகள் மற்றும் இதர பொருட்களைப் பெறவும், வேளாண் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கவும் விவசாய சீர்திருத்தங்கள் உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் இயங்கும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் வேளாண் சட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் என்று இந்தக் குழுவின் பிரதிநிதிகள் வேளாண் அமைச்சரிடம் உறுதி அளித்தனர்.

சீர்திருத்தத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அடிபணிய கூடாது என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், இந்த சட்டங்களின் பயன்கள் குறித்து விளம்பரங்கள், பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அரசின் நோக்கமும் கொள்கையும் தெளிவாக இருப்பதாகவும், விவசாயிகளுக்கு ஏதுவான இந்த சீர்திருத்தங்களின் மூலம் ஏற்கனவே பலர் பயனடைந்து வருவதாகவும், இதன் மூலம் அவர்களின் வருவாய் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெளிவுபடுத்தினார்.