சாலையோர வியாபாரிகளின் சமூக பொருளாதார விவர குறிப்பை சேகரிக்கும் திட்டம்: மத்திய அரசு தொடக்கம்

Scroll Down To Discover
Spread the love

சாலையோர வியாபாரிகளின் சமூக பொருளாதார விவர குறிப்பை சேகரிக்கும் திட்டத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை தொடங்கியுள்ளது.

பிரதமரின் ஸ்வா நிதி திட்டப் பயனாளிகளான சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், அவர்கள் பற்றிய முழு விவரத்தை சேகரிக்கும் திட்டத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை தொடங்கியுள்ளது.

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்குவதற்காக பிரதமரின் ஸ்வா நிதித் திட்டத்தை, கடந்த ஜூன் 1ம் தேதி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் அமல்படுத்தியது. பிரதமரின் ஸ்வா நிதித் திட்டத்தின் கூடுதல் அம்சமாக, பயனாளிகளின், அவர்கள் குடும்பத்தினரின் விவரக் குறிப்பை சேகரிக்கும் திட்டத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் பிரதமரின் ஸ்வா நிதி திட்டப் பயனாளிகளான சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் முழு விவரம் தயாரிக்கப்படும். இந்த விவரங்களின் அடிப்படையில், அவர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த, மத்திய அரசின் இதர நலத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். இதுதவிர, மாநில அரசின் நலத்திட்டங்களும் அவர்களுக்குக் கிடைக்க, வாய்ப்பு ஏற்படும்.

பிரதமரின் ஸ்வா நிதித் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டமாக மட்டும் இருக்கக் கூடாது, அவர்கள் குடும்பத்தினரின் ஒட்டு மொத்த சமூகப் பொருளாதார நிலையும் மேம்பட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலை நோக்கு. அதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இத்திட்டத்துக்கு, 125 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தை அமல்படுத்த, ‘குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா’ என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் முன், பரிசோதனை முயற்சியாக கயா, இந்தூர், கக்சிங், நிசாமபாத், ராஜ்கோட், வாரணாசி ஆகிய 6 நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.