புதிய பார்லிமென்டின் கட்டுமான பணிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.!

Scroll Down To Discover
Spread the love

டில்லியில் உள்ள, பார்லிமென்ட் கட்டடம், கடந்த, 1927ல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.பழைய கட்டடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லி கட்டடத்தை கட்ட, மத்திய அரசு திட்டமிட்டது. பழைய கட்டடத்துக்கு அருகிலேயே, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கட்டுமான பணிக்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி வைக்கிறார். பூமி பூஜையையும் நடத்தி வைக்கிறார்.

மத்திய மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். சில மாநிலங்களின் கவர்னர்கள், முதல்-மந்திரிகள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள். 2022-ம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே ஆண்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் புதிய நாடாளுமன்றம் தயாராகி விடும் என்று தெரிகிறது.அதைத்தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் தொல்லியல் சொத்தாக பராமரிக்கப்படும். நாடாளுமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தப்படும்.டாடா நிறுவனம், புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது. 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.