உலகெங்கும் யோகா பயிற்சி முறையை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகமும், ஐசிசிஆரும் தீவிரம்.!

Scroll Down To Discover
Spread the love

ஆயுஷ் அமைச்சகமும் இந்திய கலாச்சார தொடர்பு அமைப்பும் (ஐசிசிஆர்) இணைந்து உலக நாடுகளில் யோகா பயிற்சி முறையை ஊக்குவிக்கும் கூட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

ஐசிசிஆர் அமைப்பின் தலைவர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

யோகா சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ்களை மையமாகக் கொண்டு உலக அளவில் நம்பகத்தன்மையான யோகா பயிற்சி முறையை ஊக்குவிக்க ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

யோகா பயிற்சிகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்திருப்பதாகவும், இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு வணிக நோக்கத்துடன் பல பயிற்சி நிறுவனங்கள், தரமில்லாத பயிற்சியை அளிப்பதாகவும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதைத் தடுக்கும் வகையில் யோகா சான்றிதழ் வாரியம், தரமான மற்றும் பாரம்பரிய இந்திய யோகா பயிற்சி முறையை பல்வேறு நிறுவனங்களுடனும், சான்றிதழ் பெற்ற யோகா வல்லுனர்களுடனும் இணைந்து வழங்கவுள்ளது.