சில வருடங்களில் உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் – நிதி ஆயோக் துணைத் தலைவர்

Scroll Down To Discover
Spread the love

அறிவியல், தொழில்நுட்பம், புதுமைகளை, அனைத்து துறைகளிலும் புகுத்தி வருவதன் மூலமும், கொவிட்-19-இன் பாதிப்புகளில் இருந்து விரைந்து மீண்டு வருவதன் காரணமாகவும், அடுத்த சில வருடங்களில் உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ் குமார் கூறினார்.

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஐம்பது வருடங்களைக் கொண்டாடுவதற்காக சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இடம் பெறுவதற்கு பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களையும், நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

விவசாயம், நவீன மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், புதிய கல்விக்கொள்கை, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் நலன் ஆகியவற்றில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக டாக்டர் ராஜிவ் குமார் கூறினார்.

கருத்தரங்கில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை அனைத்து துறைகளிலும் எதிர்பார்த்த அளவுக்குப் பயன்படுத்தி இந்தியப் பொருளாதாரம் வளர்வதற்கு அறிவியல் தொழில்நுட்பத் துறை உதவியிருக்கிறது என்றார்.

இதற்கிடையே, இமாலய சூழலியலுக்கான தேசிய இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மூன்று சிறப்பு உயர்திறன் மையங்களை பேராசிரியர் அசுதோஷ் சர்மா காணொலி மூலம் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சிறப்பு உயர்திறன் மையங்கள், இரண்டு வட கிழக்கு மாநிலங்களில் உள்ள இரு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் காஷ்மீரில் நிறுவப்பட்டுள்ளன.