நிவர் புயல் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருடன் பேசிய பிரதமர் மோடி.!

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடி, நிவர் புயல் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருடன் பேசினார்.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் புயலாக மாறியது. இது தீவிரப் புயலாக வலுவடைந்து நாளை மாலை மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அமைச்சர்கள், துறைச் செயலர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இன்று மதியத்துக்கு மேல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மின்சாராம், பேரிடர் மேலாண்மை, உணவு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளன.
https://twitter.com/narendramodi/status/1331105291715407872?s=20
பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “நிவர் புயல் தொடர்பான நிலவரம் குறித்து தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் திரு. வி.நாராயணசாமி ஆகியோரிடம் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்