தடையை மீறி வேல் யாத்திரையை துவங்க முயன்ற தமிழக பாஜக தலைவர் முருகன் கைது.!

Scroll Down To Discover
Spread the love

தமிழக பாஜக சார்பில் நவ.,6 முதல் டிச.,6 வரை திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை ‛வேல் யாத்திரை’ நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா பரவலுக்கான அச்சுறுத்தல் காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. மேலும், ‛வேல் யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பின் வழக்கு தொடரலாம்,’ எனக்கூறி நீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்தது.முன்னெச்சரிக்கையாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக வேல் யாத்திரை தொடங்க உள்ள திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்

யாத்திரை குறித்து எல்.முருகன் கூறுகையில்:- ‛கடவுளை வழிபடுவது எனது அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன். கடவுள் முருகனின் துணைக்கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையை தொடங்குகிறோம்,’ எனக்கூறினார்.

இந்நிலையில் தடையை மீறி வேல்யாத்திரையை திருத்தணியில் துவக்க பாஜக தலைவர் முருகன் திருத்தணி நோக்கி புறப்பட்டார். இவரையும் , இவருடன் சென்ற வாகனங்களையும் திருவள்ளூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். சில வாக்குவாதத்திற்கு பின்னர் முருகன் மற்றும் அவருடன் 5 வாகனங்கள் மட்டும் திருத்தணிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. . தொடர்ந்து திருத்தணி சென்ற தமிழக பாஜக தலைவர், திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து வேல் யாத்திரையை, துவக்க முருகன் முயற்சி செய்தார். இதனையடுத்து தடையை மீறி துவங்க முயன்ற யாத்திரையை தடுத்து நிறுத்திய போலீசார், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகளை கைது செய்து அழைத்து சென்றனர்.