சென்னை சுங்கத் துறையினரால் 1.64 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : இருவர் கைது.!

Scroll Down To Discover
Spread the love

சென்னை சுங்கத் துறையினரால் 1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 3.15 கிலோ தங்கம், பறிமுதல் செய்யப்பட்டது.

புதன்கிழமை இரவு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா ஐஎக்ஸ் 1644 விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த விமானத்தில் சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் விமான இருக்கையின் அடியில் மொத்தம் 928 கிராம் எடையிலான தங்கப் பசையும், தங்கக் கட்டிகளும் கண்டெடுக்கப்பட்டன. உரிமை கோரப்படாத இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு 48.27 லட்ச ரூபாயாகும். மேலும் அதே விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தமது காலுரையில் 169 கிராம் எடையிலான தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விமானத்தில் இருந்து மொத்தம் 57 லட்ச ரூபாய் மதிப்பிலான 1.1 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் எஃப் இஸட் 8517ல் பயணம் செய்த நால்வரை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த போது அவர்கள் 11 தங்கப் பொட்டலங்களை தங்கள் மலக்குடலில் மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. 61.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 1.2 கிலோ தங்கம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.


செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா விமானம் ஐஎக்ஸ் 1644ல் பயணம் செய்த ஐந்து பயணிகளை சோதனையிட்டபோது , அவர்களது உள்ளாடைகள் மற்றும் மலக்குடலிலிருந்து 8 தங்கப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களிடமிருந்து 45.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 858 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. மொத்தமாக 1.64 கோடி ரூபாய் மதிப்பில் 3.15 கிலோகிராம் தங்கம் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது.