செல்பி மோகம் – அதிவேக பயணம் : அடல் சுரங்கப்பாதையில் கடந்த 3 நாட்களில் 3 விபத்துகள்..!

Scroll Down To Discover
Spread the love

உலகின் மிகவும் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை இமாச்சலபிரதேசத்தில் பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ம் தேதி திறந்து வைத்தார்.

இமாச்சலபிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக் யூனியன்பிரதேசத்தின் லே பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்த அடல் சுரங்கப்பாதை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 9.02 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மூலம் மணாலி-லே இடையேயான பயண தூரம் 46 கிலோ மீட்டர் குறைகிறது. இது ஏற்கனவே உள்ள பயண நேரத்தில் 5 மணி நேரத்தை குறைக்கிறது.


ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த சாலை பனிக்காலத்தில் 6 மாதங்களுக்கு மூடப்பட்டு இருக்கும். இதனால், லே மற்றும் இமாச்சல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு படையினருக்கும், அவர்களின் போக்குவரத்திற்கும் சற்று சிரமத்தை ஏற்படுத்திவந்தது.ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆண்டு முழுவதும் செயல்பாட்டில் இருக்கும் என்பதால் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்து மற்றும் ஆயுதங்களை எல்லைக்கு எளிதில் கொண்டு செல்ல அதிக நேரம் தேவைப்படாது. இதனால் எல்லை பாதுகாப்பில் அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த சுரங்கப்பாதையில் 3 நாட்களில் சுற்றுலா பயணிகளின் கவனக் குறைவால் 3 விபத்துகள் நடந்துள்ளதாக தலைமைப் பொறியாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதில் கவனம் செலுத்துவதும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் இருப்பது விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.அடல் சுரங்கப்பாதைக்குள் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் இந்த வாகன விபத்துக்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிகிறது. அடல் சுரங்கப்பாதைக்குள் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள் இந்த வேக கட்டுப்பாட்டை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுவதாக கூறப்படுகிறது.