போதைப் பொருளை குறைக்க தேசிய செயல் திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்.!

Scroll Down To Discover
Spread the love

2018ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை போதைப் பொருளை குறைப்பதற்கான தேசிய செயல் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமல்படுத்தியுள்ளது. பலதரப்பட்ட யுக்திகள் மூலம் போதைப்பொருளின் பாதகமான விளைவுகளை குறைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்தின் கீழ், பள்ளிகள்/கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் போதைப் பொருட்களின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை வசதிகளும் அளிக்கப்படுகின்றன. போதைப் பொருட்களால் மிகவும் பாதிக்கப்பட்ட 272 மாவட்டங்களில், விழிப்புணர்வை ஏற்படுத்த போதைபொருள் இல்லாத இந்தியா என்ற திட்டத்தை சமூக நீதித்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு அளித்த தகவல்கள் படி இந்த மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டன.

எஸ்.சி மற்றும் ஓபிசி பிரிவினர் அடங்கிய தனிநபர் பயனாளிகள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு வட்டி மானியம் அளிக்கும் புதிய நிதி திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகம் அமல்படுத்தவுள்ளது. எஸ்.சி பிரிவினருக்கான திட்டத்தை, தேசிய எஸ்.சி பிரிவினர் நிதி மேம்பாட்டு கழகம் அமல்படுத்தவுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்த சுயஉதவிக் குழுக்கள் பயனாளிகளுக்கு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் அமல்படுத்தவுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம், வங்கிகளின் கடன் வாங்கிய தகுதியான சுயஉதவி குழுவினருக்கு குறைந்த வட்டியை வழங்குவது. சமூகத்தின் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு ஏற்கனவே 2 திட்டங்களை, சமூக நீதித்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி கடனுக்கான டாக்டர் அம்பேத்கர் வட்டி மானிய திட்டம் மூலம் ரூ.20 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெற முடியும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சுய தொழில் தொடங்க சலுகை வட்டியுடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறும் திட்டத்தை தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி மேம்பாட்டு கழகம் வழங்குகிறது.