சிவகாசி கேப்வெடி ஆலையில் பயங்கர வெடி விபத்து : இரண்டு பேர் படுகாயம்..!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று கேப்வெடி ஆலையில் திடீர் விபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில், கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கேப்வெடிகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு சிறுவர்கள் துப்பாக்கியில் வைத்து வெடிக்கும், ரோல்வெடிகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. தயாரான ரோல்வெடி பேப்பர்களை, கத்தரித்து வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு அறையில் திடீர் விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் தயாரான கேப்வெடிகள் வெடித்து அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

இதில் அந்த அறையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த போர்மேன் பாண்டியராஜன், ஜெயமுத்து இருவரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்தனர். விபத்தில் காயம்பட்ட இருவரையும் மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.