5½ ஏக்கர் நிலத்தில் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

Scroll Down To Discover

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஐந்தரை ஏக்கர் நிலத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

பின்னர் திருமலை திருப்பதியில் ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவையில் அவர் கலந்துகொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.குமரகுரு, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.அந்த நிலத்துக்கான பத்திரத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சின்ஹாலிடம் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் தர்மாரெட்டி உடனிருந்தார்.


பின்னர் திருப்பதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்:- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டுவதற்காக தேவஸ்தானத்திற்கு 5½ ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து ஒப்படைத்து இருக்கிறோம். திருப்பதி தேவஸ்தானத்தால் அங்கு மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.