பஹல்காம் தாக்குதல்… காஷ்மீரைவிட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்- 80% முன்பதிவு ரத்து..!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலின் தாக்கம் ஜம்முகாஷ்மீரில் சுற்றுலாத் தொழிலை அசைத்து பார்த்திருக்கிறது. அங்கு செல்வதற்காக முன்பே திட்டமிட்டு, அதற்கான பயண ஏற்பாடுகளை செய்திருந்த சுற்றுலா பயணிகள் அதை ரத்து செய்து வருகின்றனர். குறிப்பாக, குல்மார்க், ஹஜன் பள்ளத்தாக்கு, துலிப் கார்டன்ஸ் பகுதிகளுக்கான முன்பதிவை ரத்து செய்துள்ளனர்.
இதனிடையே சுற்றுலா வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கூறுகையில், “பாதுகாப்பு மற்றும் அச்சம் காரணமாக தங்கள் பயணத்திட்டத்தை அவர்கள் ரத்து செய்து இருப்பதாக சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளனர்.
பஹல்காம் பைசரன் புல்வெளியில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் அதிக சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பயம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றனர்.
ஸ்ரீநகரைச் சேர்ந்த அஜஸ் அலி என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர் கூறுகையில், “காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். என்றாலும் பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவம் இங்கே நடந்த பிறகு யாரும் இங்கே தங்கி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ரத்துசெய்யப்பட்டுள்ளவை மிக அதிகம். கிட்டத்தட்ட 80 சதவீத பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடுத்த ஒரு மாதத்துக்கும் கூட பயணங்கள் ரத்து செய்யப்படலாம். பல ஆண்டுகளாக செய்யப்பட்ட அனைத்து நல்ல விஷயங்களும் வீணாகிவிட்டன. காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலா பயணிகளை கொண்டு வர நிறைய பாடுபடவேண்டி இருக்கும்.” என்றார்.
விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை: இதனிடையே, ஸ்ரீநகர் வழித்தடத்தில் கட்டணங்களை அதிகரிக்கக் கூடாது என்றும், விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, விமான போக்குவரத்து நிறுவனங்களுடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தி ஸ்ரீநகர் வழித்தடத்தில் கட்டணங்களை அதிகரிக்கக்கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தினார்.
ஏர் இண்டியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் ஸ்ரீநகரிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு புதன்கிழமை கூடுதலாக நான்கு விமானங்களை இயக்குகின்றன. அதேபோல் விமான நிறுவனங்கள் பயணத்தேதி மாற்றம் மற்றும் ரத்துக் கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளன.
Leave your comments here...