இது தான் ஊழல் ஒழிப்பு போல…! ரூ.2.27 கோடியுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு இடமாற்றம்..!

சமூக நலன்

இது தான் ஊழல் ஒழிப்பு போல…! ரூ.2.27 கோடியுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு இடமாற்றம்..!

இது தான் ஊழல் ஒழிப்பு போல…! ரூ.2.27 கோடியுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு  இடமாற்றம்..!

ஓசூரில் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் ஷோபனா என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.27 கோடி பணம் சிக்கியது! 38 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 57 வயதான ஷோபனா. இவர் வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஓசூர் நேரு நகரில் வசித்து வருகிறார். வேலூர் மண்டல பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (தொழில்நுட்ப கல்வி, வேலூர் மண்டல செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, செவ்வாய் இரவு ஒருவரிடமிருந்து ரூ 5 லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் பிடிப்பட்டார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது பணிகளை ஆய்வு செய்வது போன்றவை இவரது பணி.

இந்த நிலையில் மண்டல செயற்பொறியாளர் ஷோபனா லஞ்சம் வாங்குவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இரவு முதல் ரகசியமாக கண்காணித்தனர். வேலூர் ஜெயில் அருகே அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஷோபனா காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார்.

அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரது காரில் சோதனையிட்டனர். அதில் ரூ.5 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்திற்கு கணக்கு இல்லை. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கி உள்ள அறையில் சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் பணம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

அங்கிருந்த ரூ.3.92 லட்சத்திற்கான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அலுவலகம் சம்பந்தமான 18 ஆவணங்கள் ஷோபனாவின் அறையில் இருந்தன. அவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஓசூரில் உள்ள ஷோபனாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை சோதனை நடத்தினர். ஓசூர் நேருநகர் பகுதியில் அமைந்திருக்கும் அவரது சொந்த வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 38 சவரன் தங்க நகைகள்,11 வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர் சாவி, ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி மற்றும் 13 சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஊழல்தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வங்கி கணக்குகள் வங்கி லாக்கர்களில் உள்ள பணவிவரம் குறித்தான விசாரணையையும் தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி அரசு அதிகாரி மீது அறிக்கை வழங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு நிறுத்தப்படும். வழக்கு முடியாமல் பணியில் இருந்து ஓய்வு பெறக்கூட முடியாது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2.27 கோடியுடன் சிக்கிய ஷோபனாவிற்கு திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது நேரடியாக யாரும் புகார் செய்யாததால் போலீசார் அவரை கைது செய்யவில்லை. உயர் அதிகாரிகள்’சஸ்பெண்ட்’ நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஷோபனா வீட்டின் ஒவ்வொரு அறையிலும் பைகளில் தனித்தனியாக கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

இது பல்வேறு சந்தேகம், கேள்வியை எழுப்புகிறது. தீபாவளி சமயத்தில் ஷோபனா தன் உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் அரசியல் கட்சியினருக்கு வழங்க வேண்டிய கமிஷன் தொகையை வழங்காததால் மேலதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்து அவரை மிரட்டும் வகையில் சோதனை நடத்த ஏற்பாடு செய்தார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

அதுமட்டுமின்றி வங்கி லாக்கர் சாவியை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லாக்கரை திறந்து பார்த்தனரா அதில் என்ன ஆவணங்கள் இருந்தன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை; லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றனர்.

போக்குவரத்து சோதனைச்சாவடிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது அறிக்கை அளித்தவுடன் பலரது பதவி உயர்வு இன்று வரை பாதித்துள்ளது. ஆனால்ஷோபனா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைபற்றிய பின்னரும் கூட முயைாக துறைரீதியான விசாரணை நடத்தாமலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமலும் இடமாற்றம் மட்டும் செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...