புவி ஆய்வுக்கான ‘ஜிசாட் – 1’ செயற்கைக்கோளை ஆகஸ்ட்.12ல் செலுத்த திட்டம் – இஸ்ரோ

Scroll Down To Discover

புவி வளம் சார்ந்த பல்வேறு தகவல்களை குறித்த இடைவெளியில் தொடர்ந்து அனுப்பும் தொழில்நுட்பத்தில், ஜிசாட் – 1 செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.

இது குறித்து, இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஆண்டு மார்ச்சில், ஜிசாட் – 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது; கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.அதன் பின், கொரோனா பிரச்னையால் இத்திட்டம் ஓராண்டு தள்ளிப் போனது. இறுதியாக, ஆக., 12ல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் நிலம் மற்றும் கடல் எல்லைகளை உடனுக்குடன் படம் பிடித்து பூமிக்கு அனுப்பும். இதற்காக மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கேமராக்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இயற்கை பேரிடர் நிலவரத்தை கண்காணித்து, பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்கும். வனம், விளைநிலம், கனிம வளம், பனிப் பிரதேசம் உள்ளிட்டவற்றின் தகவல்களை அறிந்து கொள்ள இது உதவும். இவ்வாறு அவர் கூறினார்.